வாழ்க்கைத் தரம்
உயர உயரத் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எங்கு திரும்பினாலும்
கணினி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, தொடுதிரைச் சாதனம்.
நிலவைக் காட்டிச்
சோறு ஊட்டிய காலம் போய் ஏதேனும் ஒரு தொழில்நுட்பச் சாதனத்தைக் கையில் கொடுத்தால்தான்
உணவை உண்பேன் என்கிறது குழந்தை. பெரியவர்களும் அப்படித்தான்.
கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம், வாட்ஸப் முதலிய செயலிகளில் மூழ்கியுள்ளனர்.
அனைவரின் உலகையும் இவை ஆட்கொண்டு வருகின்றன.
அவ்வளவு ஏன்?அலுவலகத்தில் அருகில் அமர்ந்திருப்போரை அழைப்பதற்கே பலர் வாட்ஸப்பைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.
உடலுக்குச் சிறு பயிற்சியளிக்கும் வகையில் நடக்கவும் மாட்டேன், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மாட்டேன் என்றால்... நமது ஆரோக்கியத்தின் கதி?
இதற்குத் தீர்வு காணும் வகையில் அண்மையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் ( Silicon Valley) சேர்ந்த இரு தொழில்நுட்பர்கள் The Truth About Tech என்றழைக்கப்படும் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் அதிகரிப்பது அதன் இலக்கு.
அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தொழில்நுட்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளும் தேவைப்படுகின்றன.
தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில வழிகள் உள்ளன.
அவை இதோ:
- குழந்தையாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, ஒருவரோடு நேரத்தைச்
செலவிடும்போது தொழில்நுட்பச் சாதனங்களைக் கைக்கு எட்டாத வகையில் தள்ளி வைத்துவிடலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களோடு செலவிடும் நேரத்தின் மதிப்பு உயர்வதை நம்மால்
நன்கு உணர இயலும்.
- உணவு உட்கொள்ளும்போது கவனத்தை உணவில் மட்டுமே செலுத்துவது நல்லது. தொலைக்காட்சி அல்லது கைபேசியில் கவனம் செலுத்தும்போது தேவைக்கு அதிகமாக உண்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்கள் எடையும் கூடக்கூடும்.
- பிடித்த இசையைச் சாதனங்களைக் காதில் பொருத்திக்கொண்டு கேட்கும்போது சத்தத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். செவிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்க இது உதவும்.
- வாகனங்களைச் செலுத்தும்போது கைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சாலைகளில் கவனம் சிதறும்போது அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
- நடு இரவில் உறக்கத்திலிருந்து விழிக்க நேர்ந்தால் கைபேசியை நாட வேண்டாம். அதிலிருந்து எழும் ஒளி உறக்கத்தை முழுமையாகக் கலைத்துவிடும். அது உடலுக்கு அதிகச் சோர்வையும் விளைவிக்கும்.
- Selfie படங்களை எடுக்கும்போது இடம் அறிந்து செயல்படுங்கள். ஆபத்தான பகுதிகளில் நின்று Selfie எடுக்கும்போது அது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
தொழில்நுட்பத்தை அளவோடு இடமறிந்து பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
தொழில்நுட்பத்தை அளவோடு பயன்படுத்த இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.
நம்புங்கள்.
மேற்கூறியவற்றில் சிலவற்றை நானும் பின்பற்றுகிறேன்.
நான் மட்டுமல்ல, நீங்களும் ஆரோக்கியமாக
இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.
அன்புடன்
துர்கை தர்ஷிணி வீரப்பன்