Sunday, June 11, 2023

DD Radio - தமிழ் வானொலி நிலையம்

 

எனது புதிய இணைய வானொலி நிலையம்- DD Radio - கேளுங்கள்! ஆதரவளியுங்கள்! உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்! நன்றி!


Sunday, September 8, 2019

பேசுவோமா: தனிமை சில நேரங்களில் இனிமை


A Second Article Written By Me.


விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான்.
பொதுவாக விடுமுறைக்குச் செல்வோர், குடும்பத்தார் அல்லது நண்பர்களை அழைத்துச்செல்வது வழக்கம்.
இருப்பினும் தற்போது அதிகமானோர் தனியாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவருவதாக நான் சந்தித்த முகவர்கள் கூறினர். .
முதன்முதலில் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பல அச்சங்கள் எழுவது இயல்புதான்.
எனக்கும் அப்படித்தான்.
சில கேள்விகள் மனத்தில் எழந்தன...
எந்த நாட்டுக்குச் செல்வது?
பயணம் மேற்கொள்ளும் நாடு பாதுகாப்பானதா?
விசா தேவையா? தேவையென்றால் எப்படிப் பெறுவது?
விமான நுழைவுச்சீட்டுகளை எவ்வாறு வாங்குவது?
ஹோட்டல்களுக்கு எவ்வாறு பதிவு செய்வது?
வானிலை எப்படி இருக்கும்?
போக்குவரத்து வசதிகள் எப்படி?
எந்த மாதிரியான உணவுவகைகள் கிடைக்கும்?
தனியாகத் திட்டமிட்டுச் செல்வோர் உண்டு.
எனக்கு யாரேனும் யோசனை சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
தனியாகப் பயணம் மேற்கொள்வோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்குப் பயண முகவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் அதிகமான சுற்றுப்பயணிகள் செல்லும் நாடுகளின் பட்டியல் முகவர்களிடம் இருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கக்கூடிய அனுபவம் உட்பட பல்வேறு தகவல்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
அண்மையில் சிட்னி பயணத்துக்கான திட்டமிடுதலைப் பயண முகவரிடம் ஒப்படைத்தேன்.
அதன் காரணமாக எந்தச் சிரமமுமின்றி பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடிந்தது.
சுதந்திரமாக இருக்க விரும்பினேன். அதனால் யாரையும் என்னுடன் அழைத்துச் செல்லவில்லை.
பலரோடு சென்றிருந்தால் அந்தப் பயணத்தை எனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடிந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.
ஆஸ்திரேலியப் பயணத்தில் புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின்  பழக்கவழக்கங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் முடிந்தது.
தலைநகர் கான்பரா முதல் Bondi கடற்கரை, Blue Mountains, Opera House, Harbour Bridge போன்ற இடங்களுக்குச் சென்றேன்.
புதிய சூழல். புதிய அனுபவம். புதிய நட்பு.
எங்கும் காணக் கிடைக்காத பல இயற்கைக் காட்சிகள்.
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
புதிய காற்றைச் சுவாசித்தபோது கிடைத்த மனநிறைவுக்கும் அளவில்லை.
இந்தப் பயணம் வாழ்க்கையில் உற்சாகத்தோடு செயல்பட உதவியது என்றால் அது மிகையில்லை. மற்ற நாடுகளையும் தனியாகவே சென்றுபார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்தப் பயணம் எனக்குள் தூண்டிவிட்டுள்ளது.
அடுத்த பயணத்துக்கும் இப்போதே தயாராகிவிட்டேன்.
வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு புதிய நாட்டுக்குத் தனியாகச் சென்று பார்வையிடுங்களேன்.
தனிமையும் சில நேரங்களில் இனிமைதான்...

அன்புடன்,
துர்கை தர்ஷிணி வீரப்பன்

Saturday, February 24, 2018

பேசுவோமா: அளவுக்கு மீறினால் தொழில்நுட்பமும்...

A first ever பேசுவோமா article written by me as a Mediacorp Seithi's News Producer.


வாழ்க்கைத் தரம் உயர உயரத் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எங்கு திரும்பினாலும் கணினி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, தொடுதிரைச் சாதனம்.
நிலவைக் காட்டிச் சோறு ஊட்டிய காலம் போய் ஏதேனும் ஒரு தொழில்நுட்பச் சாதனத்தைக் கையில் கொடுத்தால்தான் உணவை உண்பேன் என்கிறது குழந்தை. பெரியவர்களும் அப்படித்தான்.

கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம், வாட்ஸப் முதலிய செயலிகளில் மூழ்கியுள்ளனர்.

அனைவரின் உலகையும் இவை ஆட்கொண்டு வருகின்றன.

அவ்வளவு ஏன்?அலுவலகத்தில் அருகில் அமர்ந்திருப்போரை அழைப்பதற்கே பலர் வாட்ஸப்பைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.

உடலுக்குச் சிறு பயிற்சியளிக்கும் வகையில் நடக்கவும் மாட்டேன், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மாட்டேன் என்றால்... நமது ஆரோக்கியத்தின் கதி?

இதற்குத் தீர்வு காணும் வகையில் அண்மையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் ( Silicon Valley) சேர்ந்த இரு தொழில்நுட்பர்கள் The Truth About Tech என்றழைக்கப்படும் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் அதிகரிப்பது அதன் இலக்கு.

அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தொழில்நுட்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளும் தேவைப்படுகின்றன.

தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில வழிகள் உள்ளன.


அவை இதோ:

- குழந்தையாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, ஒருவரோடு நேரத்தைச் செலவிடும்போது தொழில்நுட்பச் சாதனங்களைக் கைக்கு எட்டாத வகையில் தள்ளி வைத்துவிடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களோடு செலவிடும் நேரத்தின் மதிப்பு உயர்வதை நம்மால் நன்கு உணர இயலும்.

- உணவு உட்கொள்ளும்போது கவனத்தை உணவில் மட்டுமே செலுத்துவது நல்லது. தொலைக்காட்சி அல்லது கைபேசியில் கவனம் செலுத்தும்போது தேவைக்கு அதிகமாக உண்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்கள் எடையும் கூடக்கூடும்.

- பிடித்த இசையைச் சாதனங்களைக் காதில் பொருத்திக்கொண்டு கேட்கும்போது சத்தத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். செவிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்க இது உதவும்.

- வாகனங்களைச் செலுத்தும்போது கைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சாலைகளில் கவனம் சிதறும்போது அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

- நடு இரவில் உறக்கத்திலிருந்து விழிக்க நேர்ந்தால் கைபேசியை நாட வேண்டாம். அதிலிருந்து எழும் ஒளி உறக்கத்தை முழுமையாகக் கலைத்துவிடும். அது உடலுக்கு அதிகச் சோர்வையும் விளைவிக்கும்.

- Selfie படங்களை எடுக்கும்போது இடம் அறிந்து செயல்படுங்கள்.  ஆபத்தான பகுதிகளில் நின்று Selfie எடுக்கும்போது அது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

தொழில்நுட்பத்தை அளவோடு இடமறிந்து பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

தொழில்நுட்பத்தை அளவோடு பயன்படுத்த இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.

நம்புங்கள்.


மேற்கூறியவற்றில் சிலவற்றை நானும் பின்பற்றுகிறேன்.


நான் மட்டுமல்ல, நீங்களும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

அன்புடன்
துர்கை தர்ஷிணி வீரப்பன்